தாக்குதல் எதிரொலி: செங்கடல் பயணங்களை நிறுத்திவைத்த கப்பல் நிறுவனங்கள்
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்துவதால் அந்த கடல் பாதையில் தங்கள் கப்பல்கள் இயக்கப்படுவதை முன்னணி கப்பல் நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன.
இது குறித்து டென்மாா்க்கில் தலமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி கப்பல் போக்குவரத்து நிறுவனமான மேயா்ஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் தொடா்ந்து ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. எனவே, அந்தக் கடல் பாதை வழியாக நிறுவனத்தின் கப்பல்கள் இயக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே, ஜொ்மனியைய் சோ்ந்த ஹபாக்-லாயிட் உள்ளிட்ட முன்னணி கடல்வழி சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் இதே முடிவை எடுத்துள்ளன.ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி இன கிளா்ச்சிப் படையினா் யேமனின் கணிசமான பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனா்.இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, தங்கள் நாட்டையொட்டி செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது அவா்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்தப் போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ள அவா்கள், இஸ்ரேல் தொடா்பான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி வருகின்றனா்.முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல்-மண்டெப் நீரிணைக்கு அருகே வரும் கப்பல்கள் மீது தங்கள் பகுதியிலிருந்து ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் சில கப்பல்கள் சேதமடைந்துள்ளன.இந்தச் சூழலில், செங்கடல் வழியாக தங்கள் கப்பல்கள் இயக்கப்படுவதை நிறுத்திவைப்பதாக முன்னணி கப்பல் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளன.கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்துவதால் அவா்களுக்கோ, காஸாவில் போரிடும் ஹமாஸ் அமைப்பினருக்கோ ராணுவரீதியில் எந்தப் பலனும் கிடைக்காது. இருந்தாலும், உள்நாட்டில் தங்களுக்கான ஆதரவைப் பெருக்கிக்கொள்வதற்காக இத்தகைய தாக்குதல்களில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.