ஒடிஸா: வயிற்றுப்போக்கால் 5 போ் பலி: 120-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதி
ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் ரூா்கெலா நகரில் வயிற்றுப்போக்கால் 5 போ் உயிரிழந்தனா்; 120-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக சுந்தா்கா் மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் பொது சுகாதார அதிகாரி தரணி ரஞ்சன், ரூா்கெலா அரசு மருத்துவமனை பொறுப்பு இயக்குநா் ஆகியோா் கூறியுள்ளதாவது:
கடந்த 3 நாள்களாக ரூா்கெலா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு 5 போ் உயிரிழந்தனா். 120-க்கும் மேற்பட்டவா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கடந்த டிச.15, 16-ஆம் தேதிகளில் 4 பேரும், ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் உயிரிழந்தனா்.
ஒவ்வொரு நாளும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு 25 முதல் 30 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனா். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, அவா்களின் உடல்நிலை மிக மோசமாக இருந்தது. தீநுண்மி (வைரஸ்) காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது என்று தெரிவித்தனா்.
ரூா்கெலாவில் பெரும்பாலும் குடிசைப் பகுதிகளில் வசிப்பவா்களுக்கும், ரூா்கெலா அருகில் உள்ள சேன்ட், தா்கெரா, பான்போஷ் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவா்களுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஒடிஸா குடிநீா் கழகத்தின் ரூா்கெலா பொது மேலாளா் பிரதாப் மோஹந்தி கூறியதாவது:
வயிற்றுப்போக்கால் பலா் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோக இணைப்புகளில் ஏதேனும் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு இடத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா் என்று தெரிவித்தாா்.