;
Athirady Tamil News

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் – ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் – டக்ளஸ்

0

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின்போது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (19) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில் கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டடிருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.