அஸ்வெசும 2ஆம் கட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளை ஈடுபடுத்த ஆலோசனை
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடியது.
இதற்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம், நலன்புரி நன்மைகள் சபையின் பிரதிநிதிகள், சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
நடைமுறைச் சிக்கல்கள்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் புறக்கணித்திருந்தமையால் குறித்த செயற்பாடு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டதுடன், அவர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் கொடுப்பனவு போன்ற பிரச்சினைகளால் அவர்களின் சேவையைப் பெறமுடியவில்லை.
இந்த நடைமுறையைப் பயிற்சி அதிகாரிகளின் ஊடாக மேற்கொண்டதன் காரணமாக நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கிராம மட்டத்தில் சமூக நலன்புரி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அஸ்வெசும இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
வறுமையை அளவீடு செய்தல்
இதற்கு சட்டரீதியான தடைகள் இல்லை என்பது இங்கு தெரியவந்தமையால் பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறைத்து வறுமை போன்ற விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை ஆரம்பிக்குமாறும் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இதேவேளை மின்சாரப் பட்டியல் போன்ற அடிப்படை விடயங்களைக் கொண்டு வறுமையை அளவீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைத் தான் ஆரம்பம் தொட்டு வலியுறுத்தி வருவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும், சரியான அளவீட்டை அடிப்படையாக எடுக்கும்போது அதனை எவராலும் மறுக்கவோ அல்லது சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது என்றும் தெரிவித்தார்.