பிரித்தானியாவில் வயிற்று வலியால் துடித்த 16 வயது சிறுமி: இறுதியில் தெரியவந்த ஆபத்து
பிரித்தானியாவில் சுய மருத்துவம் செய்து கொண்ட சிறுமி உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுய மருத்துவம்
பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் மாகாணத்தில் உள்ள லின்கன்ஷையர் பகுதியில் வசித்து வந்த லேலா கான்(Layla Khan) என்ற 16 வயது சிறுமி முளைக்கட்டி காரணமாக உயிரிழந்து இருப்பது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேலா கான் என்ற 16 வயது சிறுமிக்கு 3 வாரங்களுக்கு முன்பு மாதவிடாய் கால வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சக தோழிகள் வலியை போக்குவதற்காக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
லேலா-வும் நண்பர்களின் அறிவுரையை கேட்டு நவம்பர் 25ம் திகதி முதல் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து டிசம்பர் 5ம் திகதி லேலா-வுக்கு பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.
பின் உடனடியாக அவர் க்ரிம்ஸ்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்டமக் பக் எனப்படும் வைரஸ் தாக்குதலால் இரைப்பை குடல் அழற்சி லேலா-வுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி
இந்நிலையில் அடுத்த நாள் லேலா வயிற்று வலியால் துடித்து அலறியதுடன், குளியலறையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் லேலா-வை உடனடியாக அருகில் உள்ள பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதற்காக அவருக்கு டிசம்பர் 13ம் திகதி அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் லேலா மூளைச்சாவு அடைந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனால் லேலாவின் இறப்பில் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானமாக அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.