ரூ.2,000 கோடி அவசர நிதி: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அதிகனமழை காரணமாக உருக்குலைந்து போயுள்ள, தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி அவசர நிதியாக ஒதுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், சென்னை உள்பட 8 மாவட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்தப் பாதிப்புகளின் சுவடுகள் மெல்ல மறையத் தொடங்கிய சூழலில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டங்களிலுள்ள உட்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
பிரதமருடன் சந்திப்பு: மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் சந்தித்தார். பிரதமரின் இல்லத்தில் சுமார் 20 நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது.
பிரதமருடனான சந்திப்பின்போது, தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கோரிக்கை மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: மிக்ஜம் புயலால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது பற்றியும், உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் ஏற்கெனவே கோரப்பட்டுள்ளது என்பதை பிரதமரிடம் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்த நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
தென் மாவட்ட பாதிப்பு: மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டது போன்று, தென் மாவட்டங்களில் 100 ஆண்டுகள் இல்லாத வகையில் இப்போது பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமரிடம் விளக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
மேலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்ய தற்காலிகமாக ரூ.2,000 கோடியை அவசர நிவாரண நிதியாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசு கோரிய நிதி விவரங்கள்
மிக்ஜம் புயல் பாதிப்பு: தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7,033 கோடி
நிரந்தர நிவாரணத் தொகை: ரூ.12,659 கோடி தென் மாவட்ட மழை பாதிப்பு: தற்காலிக சீரமைப்புப் பணிக்கு ரூ.2,000 கோடி மொத்தம்: ரூ.21,692 கோடி