மீண்டும் ஒரு போர் நிறுத்தம் : எகிப்து விரைகிறார் ஹமாஸ் தலைவர்
காசாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்திற்கு சென்றுள்ளார்
ஹமாஸின் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே புதனன்று கெய்ரோவிற்கு வந்து இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் ஹமாஸிற்கும் இடையில் ஒரு புதிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பிரான்ஸ் 24 செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு
ஹமாஸ் அமைப்பின் ஆதாரத்தை மேற்கோள்காட்டி பிரெஞ்சு செய்தி நிறுவனம், ஹனியேவும் அவரது தூதுக்குழுவும் அங்கு பல சந்திப்புகளை நடத்துவார்கள், குறிப்பாக எகிப்திய உளவுத்துறையின் இயக்குனர் அப்பாஸ் கமெலுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
பிணைக்கைதிகளை விடுவிக்க
இந்தப்பேச்சுவார்த்தையில் வடக்கு காசா பகுதியில் முற்றுகையை முடிவிற்கு கொண்டு வருதல், அங்கிருந்து படையை மீளப்பெறல், கைதிகள் பரிமாற்றம்,போர்நிறுத்தம், மக்களுக்கான உதவிப்பொருட்களை வழங்குதல் ஆகிய விடயங்கள் முக்கிய இடம்பிடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகின்றன. ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவும் போர் நிறுத்தத்துக்கும் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.