யாழில். கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
கடந்த 06ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள் , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது.
அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத சிறைத்தண்டனை விதித்த மன்று அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்தது.
அதேவேளை படகுகள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்த மன்று , அன்றைய தினம் படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.