விதை உருளைக்கிழங்கு இறக்குமதி தொடர்பில் விசாரணை அவசியம்
விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கில் பக்ரீறியா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் வட மாகாண பிரதி பணிப்பாளரிடம், ஆளுநர் கேள்விகளை முன்வைத்தார்.
எவ்வித தரச் சான்றிதழும் இன்றி குப்பிளான் களஞ்சியசாலைக்கு விதை உருளை கிழங்குகள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன, இதற்கான அனுமதியை வழங்கியது யார்?, தற்போது அவற்றை அழிப்பதற்குரிய செலவுகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மாற்று செயற்பாடுகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கேள்விகளை முன்வைத்தார்.
இந்நிலையில் விதை உருளைகிழங்கு இறக்குமதியில் மோசடிகள் இடம்பெற்றிருக்க கூடும் என்பதால் அது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்தினார். இந்த தீர்மானத்திற்கு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவும் இணக்கம் தெரிவித்தார்.