நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும்..! விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடம் அருகே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேற்று முதலே நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணிக்கு அவரின் ஊர்வலம் தீவுத்திடலிலிருந்து புறப்படுகிறது.
பின்னர் மாலை 4.45 மணிக்கு தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
நெகிழ்ச்சி சம்பவம்
இந்நிலையில் நேற்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட இடத்திற்கு அருகே நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு அருகே இருந்த வீட்டிலிருந்தவர்கள் இறுதிச்சடங்கிற்கு வந்த மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வந்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் சற்றும் சளைக்காமல் கேட்கும்போதெல்லாம் தண்ணீரை அள்ளி கொடுத்துக்கொண்டே இருந்தனர்.
மேலும் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி கொடுத்துவந்த இந்த குடும்பத்தினர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். நல்ல மனிதர்களுக்கு என்றும் நல்லதே நடக்கும் என்பது போல இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.