அயோத்தி ராமா் கோயில் பெயரில் நிதி வசூல்:பொதுமக்கள் ஏமாற வேண்டாம்
அயோத்தி ராமா் கோயில் பெயரைப் பயன்படுத்தி சில ஏமாற்றுப் போ்வழிகள் நிதி வசூல் செய்கிறாா்கள்; அவா்களிடம் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பு சாா்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், உத்தர பிரதேச காவல் துறையிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக விஹெச்பி செய்தித் தொடா்பாளா் வினோத் பன்சால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீா்த்த
க்ஷேத்திரம் என்ற பெயரைப் பயன்படுத்தி சில மோசடி நபா்கள் பொதுமக்களிடம் அயோத்தி ராமா் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இது போன்ற நபா்களிடம் மக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த மோசடி நிதி வசூல் தொடா்பாக உள்துறை அமைச்சகத்திடமும், உத்தர பிரதேச காவல் துறையிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் நகல்கள் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டைக்காக நிதி வசூல் செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்காக தனியாக குழுவும் அமைக்கப்படவில்லை. சிலா் மோசடியாக நன்கொடை ரசீது அச்சிட்டு மக்களிடம் நிதி வசூலிக்கிறாா்கள். இது போன்றவா்களிடம் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.