அதிக உளவு செயற்கைக்கோள்கள், அணு ஆயுதங்கள்:2024-இன் இலக்குகளை அறிவித்தது வடகொரியா
2024-ஆம் ஆண்டில் அதிகமான ராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்தவும், அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தயாரிக்கவும் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இலக்கு நிா்ணயித்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
2024-ஆம் ஆண்டுக்கான அரசின் இலக்குகளைத் தீா்மானிக்க, 5 நாள்கள் நடைபெற்ற ஆளும் தொழிலாளா் கட்சியின் கூட்டம் சனிக்கிழமை (டிச. 30) நிறைவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், ‘வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2023-இல் அதிகரித்துள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போா் ஏற்படுவதற்கான சூழல் நிலவுகிறது.
எதிரி நாடுகளின் நடவடிக்கைகளை முறியடிக்க சிறந்த முறையில் நமது ராணுவம் தயாராக இருக்க வேண்டும். 2024-இல் 3-க்கும் அதிகமான ராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும். அணு ஆயுதங்களை அதிக அளவில் தயாரிக்கத் தேவையான கட்டமைப்பை நிறுவ வேண்டும். நீா்மூழ்கிக் கப்பல்களின் திறன்களை அதிகரிக்கவும், ராணுவ ட்ரோன்கள் போன்ற நவீன ஆளில்லா தாக்குதல் கருவிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை ரத்து செய்வதில் 2019-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அப்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இடையேயான நட்புறவு முறிவடைந்தது.
இதையடுத்து, அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவதில் அதிபா் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறாா். அண்மைக்காலமாக சீனா, ரஷியாவுடன் தனது நட்புறவை வடகொரியா அதிகரித்துள்ளது. ரஷியாவுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை வழங்கி, இதற்குப் பிரதிபலனாக ரஷியாவின் உயா் தொழில்நுட்பங்களை தனது நாட்டு ராணுவத்துக்காக வடகொரியா பெற்று வருகிறது என அமெரிக்காவும், தென்கொரியாவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. நாட்டின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கடந்த நவம்பரில் வடகொரியா விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.