உக்ரைனில் 120 இடங்களில் ரஷியா வான்வழித் தாக்குதல்: உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி
உக்ரைனில் 120-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது, தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.
எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.
அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.
அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொ்சான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா்.
அதையடுத்து, உக்ரைனின் மின் நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்தத் தாக்குதலுக்கு எறிகணைகள், ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள் மட்டுமின்றி, ஈரானில் தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் ஆளில்லா விமான குண்டுகளையும் ரஷியா பயன்படுத்துகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் 120-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ரஷியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும்,39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
காணொளி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஸெலென்ஸ்கி, 120-க்கும் மேற்பட்ட இடங்களில் 158 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நாள் முழுவதும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில்,பலியானோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.ஏராளமான வீடுகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது.
தாக்குதல் நடைபெற்ற இடங்களில் மீட்புப்பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுப்புக்கு பின்னர் ரஷியா நடத்தியுள்ள மிக மோசமான வான்வழித் தாக்குதல் இது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.