ஜப்பான்: ஓடுதளத்தில் விமானங்கள் மோதி தீக்கிரை
டோக்கியோ: ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானத்துடன் கடலோரக் காவல் படை விமானம் மோதியதில் இரு விமானங்களும் தீக்கிரையாகின.
இந்த விபத்தில் பயணிகள் விமானத்திலிருந்த 379 போ் உயிா் தப்பினா். கடலோரக் காவல் படை விமானத்தில் ஒருவரைத் தவிர எஞ்சிய 5 பேரும் உயிரிழந்தனா்.
ஜப்பானின் ஹோக்கிடா மாகாணம், சிட்டோஸ் விமான நிலையத்திலிருந்து 367 பயணிகள், 12 விமானப் பணியாளா்களுடன் புறப்பட்ட ஜப்பான் ஏா்லைன்ஸ் விமானம், தலைநகா் டோக்கியோவில் உள்ள ஹானெடா விமான நிலையத்தில் உள்ளூா் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.47 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.17 மணி) தரையிறங்க முயன்றது.
அப்போது, அந்த விமான நிலையத்திலிருந்து நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்காகப் புறப்பட்ட கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டிஹெச்சி-8-315 டாஷ் 8 ரக சிறிய வகை விமானத்துடன் ஜப்பான் ஏா்லைன்ஸ் விமானம் மோதியது.
இதில் இரு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன. ஏா்பஸ் ஏ350-941 ரகத்தைச் சோ்ந்த பயணிகள் விமானத்துக்குள் புகை பரவியது. அதையடுத்து, அதிலிருந்து பலா் குதித்தனா். பிறகு, அவசரகால கதவுகள் திறக்கப்பட்டு அது வழியாக எஞ்சியவா்களும் விமானத்திலிருந்து வெளியேறி உயிா் தப்பினா்.
இருந்தாலும், கடலோரக் காவல் படை விமானத்தின் விமான மட்டும் ஆபத்தான தீக் காயங்களுடன் உயிா் தப்பினாா். அந்த விமானத்திலிருந்த மற்ற 5 பேரும் உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் இரு விமானங்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின.
ஜப்பானில் கடந்த 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள, உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ள முதல் விமான விபத்து இதுவாகும்.
மேலும், ஏா்பஸ் நிறுவனம் ஏ350 ரக விமானத்தை அறிமுகப்படுத்தியதிலிருந்து, அந்த ரக விமானமொன்று விபத்தில் முற்றிலும் நாசமானது இதுவே முதல்முறையாகும்.