பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைத்த ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம்
பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம், பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக உள்விவகார செயலர் Cleverly தெரிவித்துள்ளார்.
கடும் விவாதத்தை ஏற்படுத்திய
கடும் விவாதத்தை ஏற்படுத்திய பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மட்டுமே புலகிடக் கோரிக்கையாளர் நெருக்கடியை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள James Cleverly, இன்னும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சட்டவிரோதமாக குடியேறியுள்ள 50,000 புலம்பெயர் மக்கள் தற்போதும் பிரித்தானிய பொதுமக்களின் வரிப்பணத்தில் ஹொட்டல்களில் வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, புகலிடம் கோரியுள்ளோர் எண்ணிகை தற்போது 98,000 என்றும், இந்த விவகாரத்தில் உடனடி முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் James Cleverly தெரிவிக்கையில்,
நாங்கள் என்ன உறுதி அளித்தோமோ அதை அரசாங்கம் செய்து முடித்துள்ளது என்றார். ஆனால், புகலிடம் கோரியுள்ள 4500 விண்ணப்பங்கள் இதுவரை முதல் நிலையைக் கூட கடக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
5 வாக்குறுதிகளில் ஒன்று
ருவாண்டா திட்டம் தற்போது செயற்பாட்டில் இல்லை என்றாலும், அது எதிர்காலம் கருதி முன்னெடுக்கப்பட்ட திட்டம் என்றும், அதன் தாக்கம் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது என்றும் James Cleverly தெரிவித்துள்ளார்.
மேலும், பிரான்ஸ், அல்பேனியா, ருமேனியா மற்றும் ஐரோப்பாவைச் சுற்றியுள்ள பிற நாடுகள் உட்பட சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் ஊடாக சிறு படகுகளில் பிரித்தானியா நோக்கி படையெடுக்கும் மக்களை கட்டுப்படுத்த முடியும் என்றார்.
இதனால் மக்களை பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திவரும் நபர்களின் தொழிலை சிதைக்க முடியும் என தெரிவித்துள்ளார். பிரதமர் ரிஷி சுனக் முன்வைக்கும் ருவாண்டா திட்டம் என்பது சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
மட்டுமின்றி, ருவாண்டா திட்டம் தொடர்பில் சொந்த கட்சியிலேயே உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரித்தானிய மக்களுக்கு ரிஷி சுனக் அளித்த 5 வாக்குறுதிகளில் ஒன்று சிறு படகுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை. அத்துடன், 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பழைய புகலிட விண்ணப்பங்களை நீக்குவதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.