Zomato டெலிவரிக்கு ஒரே நாளில் ரூ.97 லட்சத்தை டிப்ஸாக அள்ளிக் கொடுத்த உணவு பிரியர்கள்
புத்தாண்டுக்கு முந்தைய நாளில் மட்டும் Zomato உணவு டெலிவரிமேன்களுக்கு ரூ.97 லட்சத்தை டிப்ஸாக வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ளனர்.
தற்போதைய காலத்தில் சிறிய பொருளில் இருந்து எந்த பொருளாக இருந்தாலும், நேரடியாக கடைக்கு செல்லாமல் ஒன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பழக்கத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
உணவு முதல் ஐபோன் வரை ஒரே இடத்தில் இருந்தபடியே பெறுகிறோம். குறிப்பாக உணவு செயலிகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்வது இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
அந்தவகையில், ஒன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தவற்காக குறிப்பிட்ட உணவு நிறுவனங்களின் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
உணவு ஆர்டர் செய்யும் செயலிகளில் ஒன்றான Zomato -வை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் இருந்து கொண்டே பெறுகின்றனர்.
இப்படி உணவு விநியோகம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் பலரும் டிப்ஸ் ஆக கூடுதல் பணத்தை கொடுத்து வருகின்றனர். இந்த மாதிரி டிப்ஸாக வரும் பணத்தை டெலிவரிமேன்களுக்கே உணவு விநியோக நிறுவனங்கள் கொடுக்கின்றன.
ஒரே நாளில் ரூ.97 லட்சம் டிப்ஸ்
இந்நிலையில், புத்தாண்டுக்கு முந்தைய நாளான டிசம்பர் 31 -ம் திகதி மட்டும் டிப்ஸ் தொகையாக மட்டும் 97 லட்ச ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் அளித்து இருப்பதாக சோமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை சோமோட்டோ நிறுவனர்களில் ஒருவரான தீபந்தர் கோயல் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “லவ் யூ இந்தியா, தற்போதுவரை 97 லட்ச ரூபாயை டிப்ஸ் ஆக கொடுத்து இருக்கிறீர்கள். டெலிவரி பார்ட்னர்கள் தொடர்ந்து டெலிவரி செய்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.