பொங்கல் பண்டிகைக்கு பீர் குடிக்கும் போட்டி… பேனரால் எழுந்த சர்ச்சை
பொங்கல் பண்டிகையின்போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக வைக்கப்பட்ட பேனர் வைரலாகி வருகிறது.
பொதுவாக, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு, பண்டிகையைக் கொண்டாடுவார்கள். கிராமங்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்துவர்.
அதில் கபடி, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், மியூசிக்கல் சேர், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்படும்.
மேலும், சில இடங்களில் பரோட்டா சாப்பிடும் போட்டி, கரும்பு சாப்பிடும் போட்டி என வித்தியாசமான போட்டிகளை நடத்துவார்கள். அந்தவகையில் பீர் குடிக்கும் போட்டி வைரலாகி வருகிறது.
வைரல் பேனர்
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வாணக்கன்காடு பகுதி இளைஞர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர்.
அவர்கள் வைத்துள்ள பேனரில், “காணும் பொங்கல் நாளில் பீர் குடிக்கும் போட்டி நடத்தப்படுகிறது. 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024 எனவும், ஒன்பதரை பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024 எனவும், 9 பீர் குடித்தால் மூன்றாம் பரிசு ரூ.3,02 4 எனவும், 8 பீர் குடித்தால் நான்காம் பரிசு ரூ.2,024 எனவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், “வாந்தி எடுத்தால் அல்லது துப்பினால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். அவர்கள் குடித்த பீருக்கான பணத்தையும் செலுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மது நாட்டுக்கும், உயிருக்கும், உடல்நலத்திற்கு தீங்கானது என்று கூறிய பின்னரும் இப்படி பேனர் வைத்து போட்டியை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.