உலகிலேயே உயரமான சிலையாக வரவுள்ள ராமர் சிலை… சர்தார் படேலை விட அதிகம்… எத்தனை மீட்டர் தெரியுமா?
ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உலகின் அதி உயர சிலை உருவாக்கம் என்ற சாதனை படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி, ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கிறது. ராமர் ஜென்மபூமியில் எந்த வடிவில் ராமர் சிலை நிறுவப்படுகிறது என்பதில் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
823 அடி உயர ராமர் சிலையை உருவாக்க ஹரியானாவைச் சேர்ந்த சிற்பியான நரேஷ் குமாவத் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த சிலை அயோத்தியில் சரயு நதிக்கரையில் நிறுவப்படலாம் என்று கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் ராமரின் இந்த வடிவம் உலகின் மிக உயரமான சிலை என்ற சாதனையை படைக்கும் என்று கூறுகின்றனர். இந்த சிலை 13,000 டன் எடை கொண்டதாக இருக்கும்.
ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் குஜராத் மாநிலம் கெவாடியாவில் கட்டப்பட்ட 790 அடி அளவிலான சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் இதுவரை உலகின் மிக உயரமான சிலை என்ற சாதனை படைத்துள்ளது. இந்த சிலையின் 70 முதல் 80% வேலை சீனாவில் செய்யப்பட்டிருந்தாலும், நரேஷ் குமாவத், பட்ஜெட்டின் இறுதி ஒப்புதலைப் பெற்றால், ராமர் சிலை முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக உயரமான சிலையாக இருக்கும் என்று கூறுகிறார்.
உலகின் நான்காவது பெரிய சிலை என்ற சாதனை ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் நிறுவப்பட்ட சிவன் சிலைக்கு உண்டு. இதுவும் நரேஷ் குமாவத்தின் கலைப்படைப்பு ஆகும். சிற்பி நரேஷ் குமாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து சிலையின் முன்மாதிரிக்கான ஒப்புதலைப் பெற்றுள்ளார் என்று தெரிகிறது. இந்த சிலை பஞ்ச உலோகத்தால் செய்யப்பட உள்ளது, அதில் 80% செம்பு பயன்படுத்தப்படும். இந்த சிலையை முடிக்க 3,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நொய்டாவில் உள்ள சிவனின் சிலையும் சிற்பி நரேஷ் குமாவத் உருவாக்கிய கலைப்படைப்பு ஆகும். இது தவிர, உச்சநீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலை, இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை, நாடாளுமன்றத்திற்குள் உள்ள பல கலை படைப்புகள் ஆகியவை உலோகத்தால் செய்யப்பட்டவை.