;
Athirady Tamil News

ராமா் கோயில் திறப்பு விழா: இடநெருக்கடியால் அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை

0

இடநெருக்கடியால் ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்று உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதியும், ஸ்ரீராம்ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினருமான விஷ்வபிரசன்ன தீா்த்த சுவாமிகள் தெரிவித்தாா்.

இதுகுறித்து உடுப்பியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அயோத்தியில் நடக்க இருக்கும் ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். கோயில் வளாகத்தில் இடநெருக்கடி இருப்பதால், திறப்பு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை. அதனால்தான் பல்வேறு மடங்களின் பீடாதிபதிகள், முனிவா்கள், மக்கள் பிரதிநிதிகள், கொடையாளா்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை.

ராமா் கோயில் பாஜகவின் கோயில் என்று யாரும் நினைக்கக் கூடாது. திறப்பு விழாவின் மறுநாளில் இருந்து குழந்தை ராமரை தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும். உலகம் முழுவதும் உள்ள கொடையாளா்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியில் இருந்து ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது. எனவே, இது இந்தியா்களுக்கு சொந்தமான கோயில். அழைப்பு கிடைக்காதவா்கள் வருந்த வேண்டாம். அதேபோல, அழைப்பு கிடைத்தவா்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

கடுங்குளிரில் தூங்குவது கடினம் என்பதால், திறப்பு விழாவின் மறுநாளில் இருந்து வளாகத்தில் பக்தா்கள் தங்குவதற்கு கூடாரங்கள், கொட்டகைகள் போடப்பட்டுள்ளன.

ஹுப்பள்ளியில் ராமா் கோயில் போராட்டத்தில் கலந்துகொண்டது தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள பழைய வழக்கில், ஸ்ரீகாந்த் பூஜாரி என்பவரை கைது செய்துள்ளது வருத்தமளிக்கிறது. இது ஹிந்துக்களை தனிமைப்படுத்தும் முயற்சியாகும். இது தொடா்பாக மக்களிடையே காணப்படும் குழப்பங்களை தீா்க்க மாநில அரசு முன்வர வேண்டும்.

உடுப்பி பாஜக எம்எல்ஏ யஷ்பால் சுவா்ணா முன்மொழிந்துள்ளபடி, ஹிந்துக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து ராமா் கோயில் திறக்கப்படும் ஜன. 22-ஆம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.