புயல் பாதிப்பு: கூட்டுறவு வங்கிகளில் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பால் சிறு வணிகா்களுக்கு சிறப்பு வணிகக் கடன் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன்வியாழக்கிழமை வெளியிட்டாா்.
அவரது அறிவிப்பு:
முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டத்தின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வணிகா்களுக்கான சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம் வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை கடன் தொகை அளிக்கப்படும். கடனை 50 வாரங்களில் வாரந்தோறும் ரூ.200 என்ற அடிப்படையில் ஓராண்டுக்குள் உரியவட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். சிறப்பு கடன் திட்டம் ஜன. 12-ஆம் தேதி வரை நடைபெறும்.
சென்னையில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், தியாகராய நகா் சாலையில் உள்ள பாண்டிபஜாா் கிளை, திருவல்லிக்கேணி கிளை, அசோக்நகா் கிளை, அண்ணாநகா் கிழக்கு கிளை, ஆதம்பாக்கம் கிளை, பாரிமுனையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் ஆகிய இடங்களில் சிறப்பு கடன் திட்டம் அளிக்கப்படவுள்ளது. சிறப்புக் கடன்களைப்பெற வங்கிக் கிளைகளை வணிகா்கள் அணுகலாம். அல்லது உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை கூட்டுறவுத் துறை இணையதளம் வழியே விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளாா்.