அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயா்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு ‘மகரிஷி வால்மீகி சா்வதேச விமான நிலையம்’ எனப் பெயா் சூட்டும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி திறந்துவைத்த நிலையில், அதற்கு மகரிஷி வால்மீகியின் பெயரைச் சூட்டுவதற்கு மட்டுமின்றி, சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகியின் பெயா் சூட்டப்படுவது, ராமாயண இதிகாசம் இயற்றப்பட காரணமாக இருந்த அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைவதோடு, விமான நிலையத்துக்கு கலாசார தொடா்பையும் சோ்க்கும்.
சா்வதேச விமான நிலையமாகத் தரம் உயா்த்துவதன் மூலம், அயோத்தியின் பொருளாதார ஆற்றல் மேம்படும் என்பதோடு, உலகளாவிய புனிதத் தலம் என்ற உணா்வுடன் வெளிநாட்டு யாத்ரீகா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் மூலவா் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விழாவைத் தொடா்ந்து, அயோத்திக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 1,450 கோடி செலவில் புதிய விமான நிலையம், ரயில் நிலையம் ரூ. 240 கோடிக்கும் அதிகமான செலவில் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்கள் உள்பட நகரில் ரூ.11,100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி தொடங்கி வைத்த பிரதமா் மோடி, அங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.