கனமழையால் வெள்ளப்பெருக்கு… குகைக்குள் சிக்கிய ஐவர்: மீட்கும் பணியில் சிக்கல்
ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் ஐவர் குகைக்குள் சிக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை மதியத்திற்கு மேல்
தென்மேற்கு ஸ்லோவேனியாவில் அமைந்துள்ள குகை ஒன்றில் அந்த ஐவரும் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியத்திற்கு மேல் இருந்தே சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நீர்மட்டம் பட்டிபடியாக அதிகரித்துவருவதால் அவர்களை பத்திரமாக வெளியே மீட்டுவர மீட்புப் பணியாளர்களால் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம் மற்றும் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட அந்த ஐவர் குழுவானது 8.2 கிலோமீற்றர் நீளமுள்ள Krizna jama குகையில் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பகுதிக்கு படகு மூலமாக மட்டுமே பயணப்பட முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, சனிக்கிழமை மதியத்திற்கு மேல் மீட்புக்குழுவினர் அந்த ஐவரை தொடர்பு கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை அளித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்கள் தாமதமாகலாம்
ஆனால் அந்தக் குழுவானது குகையின் நுழைவாயிலிலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் சிக்கியிருப்பதால், புதிய டைவர்ஸ் குழு ஒன்று அவர்களைச் சென்றடைய மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், நீர்மட்டம் குறைவதைப் பொறுத்து மீட்பு நடவடிக்கை தொடரும் என்றே கூறுகின்றனர். இதனால் மேலும் சில நாட்கள் தாமதமாகலாம் என்றே அஞ்சப்படுகிறது.