போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பள உயர்வு: ரணிலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை
ஏறக்குறைய ஐந்து வருடங்களாக தாமதமாகி வரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளத்தை உத்தியோகபூர்வமாக திருத்தியமைப்பதற்கு உடனடியாக தலையிடுமாறு அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் இது வரையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பள திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
பிரச்சினைக்கு தீர்வு
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல தடவைகள் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐந்து வருடங்களாக இந்த தாமதத்தை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.