காலிமுகத்திடல் போராட்டம் : மக்கள் கோரிக்கைகளை ரணில் பூர்த்தி செய்வதாக நாமல் ராஜபக்ச தகவல்
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான தீர்மானங்களை தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் முன்னாள் ஆட்சியாளர்களால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு, வரிகள் குறைக்கப்பட்டமை தொடர்பில் காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கேள்வியெழுப்பபட்டதை நினைவூட்டிய நாமல் ராஜபக்ச, குறித்த கேள்விகளுக்கு தற்போது ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.
கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் ஆட்சி காலம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில், இலங்கையில் வரிகள் குறைக்கப்பட்டமை, மின்கட்டணம் அதிகரிக்கப்படாமை உள்ளிட்ட சில காரணங்கள் தொடர்பில் மக்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
அத்துடன், எரிபொருள் கட்டணத்தை அதிகரித்தாவது ஏன் அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வியெழுப்பப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களாள ராஜபக்சக்கள் பெயரிடப்பட்டனர்.
இலங்கையின் பொருளாதாரம்
மக்கள் மீதான சுமையை குறைத்து இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், பின்னர் காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலம் மக்கள் ஆட்சி மாற்றத்தை கோரியிருந்தார்கள்.
பல பதாகைகளை ஏந்திய வண்ணம் அரசாங்கத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ரணில்
இதன் போது, சிறிலங்காவின் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கவுக்கு, போராட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
குறித்த கோரிக்கைகளில் சில இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருகிறார்” என தெரிவித்துள்ளார்.