காஸாவில் 100 பேருக்கு ஒருவர் படுகொலை! பெண்கள், குழந்தைகள் அதிகம்!
காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து தற்போது வரை 100 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தைக் குறிப்பதாக பாலஸ்தீனிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்தப்போரில் காஸாவில் மட்டும் 22,835 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சர் ரமல்லாஹ் தெரிவித்துள்ளார்.
காஸாவில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் எண்ணிக்கை 22 லட்சம். இதில், 22,835 பேர் கொல்லப்பட்டுள்ளதால், இதுவரை மொத்த மக்கள்தொகையில் ஒரு சதவிகித மக்கள் போரால் இறந்துள்ளனர். இறந்தவர்களில் 5,300 பேர் பெண்கள். 9,000 பேர் குழந்தைகள்.
காஸா கட்டுப்பாட்டிற்குட்பட்ட மருத்துவமனைகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 58,416 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 2.6 சதவிகிதம். எனில், 40 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் போரில் படுகாயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டிற்குள் உள்ல காஸாவில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை ரமல்லாஹ் குறிப்பிட்டுள்ளதை விட அதிகம் எனக் கூறப்படுகிறது. காஸாவில் இதுவரை 23,084 பேர் இறந்துள்ளதாகவும், 58,926 படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேற்கு கரையிலிருந்து இறந்த மற்றும் படுகாயமடைந்தவர்களின் தரவுகள் சென்று சேர்வதில் ஏற்படும் தாமதமே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ராணுவத்தினர் என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.