செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கூடாது: அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல்
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா். ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயா்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 200 நாள்களுக்கும் மேலாக அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென கோரப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை பதில் மனு:
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு திங்கள்கிழமை காலை விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வழக்குரைஞா் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது கோபமடைந்த நீதிபதி, ‘ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீா்கள்? என அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினாா். பின்னா் வழக்கின் விசாரணை சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடா்ந்து அமலாக்கத்துறை சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், செந்தில் பாலாஜி மீது வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்கக் கூடாது, ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.