இஸ்ரேல் எல்லைகளில் இனி சண்டை ஓயாது: ஹிஸ்புல்லா
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா தலைவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் ஹிஸ்புல்லா ஆயுதப்படை, இஸ்ரேலின் ராணுவ தலைமையகத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம், வடக்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள தங்களின் நிலைகளில் ஒன்றை ஹிஸ்புல்லா தாக்கியதை உறுதிசெய்துள்ளது. ஆனால் எந்தவித காயமோ சேதாரமோ ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், செவ்வாய்கிழமை இஸ்ரேல் லெபனானில் நடத்திய டிரோன் தாக்குதலில் மூன்று ஹிஸ்புல்லா படையினர் பலியாகியுள்ளனர்.
ஹிஸ்புல்லா, இஸ்ரேலின் வடக்கு பகுதிக்கான தலைமையகமான சஃபெத் பகுதியில் தாக்குதல் நடத்தியாகத் தெரிவித்துள்ளது.
சஃபெத், எல்லை பகுதியில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளதால் நாள்தோறும் நடைபெறும் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தாக்குதலுள்ளாகாமல் தப்பி வந்தது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் , வடக்கு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஹிஸ்புல்லா படைகளைப் பின்வாங்குமாறு பல வாரங்களாக வலியுறுத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பு, அல்-தாவில் கொல்லப்பட்டது இந்தப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் எல்லையில் சண்டை ஓயாது எனவும் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியான அல்-தாவில் பயணித்த கார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்தார். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.