வங்கதேச தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை: ஐ.நா.
டாக்கா / நியூயார்க்: வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று ஐ.நா.வும், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விமர்சித்துள்ளன.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டும், அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டும் உள்ளனர். முக்கிய கட்சித் தலைவர்கள் உள்பட சுமார் 25,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
எனவே, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றுள்ளதாக நம்புவதற்கில்லை’ என்றார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேசத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்ற
சர்வதேச தேர்தல் பார்வையாளர்களின் கருத்தை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான வரையறைகள் வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் பின்பற்றப்படவில்லை என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகமும்
விமர்சித்துள்ளது.
300 இடங்களைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலை வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அதனையும் மீறி நடைபெற்ற அந்தத் தேர்தலில் வெறும் 41.8 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
இந்தத் தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி 222 இடங்களைக் கைப்பற்றியது. எஞ்சிய இடங்களில் 62-ஐ சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள், போட்டி இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அவாமி லீக் கட்சியால் நிறுத்தப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
அதையடுத்து, நாட்டின் பிரதமராக அந்தக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா 5-ஆவது முறையாகப் பொறுப்பேற்கிறார்.