பண்டிகை நேரத்தில் பிடிவாதம் ஏன்..? அரசுக்கும் போக்குவரத்து சங்கங்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.
வேலை நிறுத்தம்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த சூழலில் தான், தமிழக அரசு, தற்காலிக பணியாளர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வில், ஒரு பொதுநல மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் கேள்வி
இன்று முதல் வழக்காக அதனை விசாரித்த நீதிமன்றம், விசாரணையின் போது, போராட்டம் நடத்த உரிமை உள்ளது என கூறி, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது என கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், பொங்கலின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி, இதனால் அதிகம் பாதிக்கப்படுவது மக்களே என்று குறிப்பிட்டு அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் எனக் கேள்விகளை எழுப்பியது.
மேலும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது