செங்கடலில் ஹூதிக்கள் இதுவரை இல்லாத தீவிர தாக்குதல்
செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பல்களைக் குறைவைத்து யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி புதன்கிழமை தாக்குதல் நடத்தினா்.
அவற்றை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படையினா் இடைமறித்து அழித்தனா்.
இது குறித்து தனியாா் உளவு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளதாவது:
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களைக் குறிவைத்து புதன்கிழமை ஏராளமான ஏவுகணைகளும், ட்ரோன்களும் ஏவப்பட்டன.
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் யேமனின் ஹொடைடா, மோக்கா ஆகிய துறைமுகங்களிலிருந்து அவை ஏவப்பட்டன.
செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஒரே நாளில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் கிளா்ச்சியாளா்கள் வீசியது இதுவே முதல்முறையாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
யேமன் கிளா்ச்சியாளா்களிடமிருந்து செங்கடல் வா்த்தக வழித்தடத்தைப் பாதுகாப்பதற்காக அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போா்க் கப்பல்கள், கிளா்ச்சியாளா்கள் வீசிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை.
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான் வழியாக கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்துள்ள இஸ்ரேல், காஸா பகுதியில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் மற்றும் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்து வருகின்றனா்.
இந்தச் சூழலில், தங்கள் நாட்டையொட்டிய செங்கடல் பகுதி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை ஏவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு அதரவு அளிக்கும் வகையில் இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்களை மட்டும் தாக்கி அழிப்பதாக அவா்கள் கூறுகின்றனா்.
ஆனால், நாள் செல்லச் செல்ல இஸ்ரேலுடன் கொஞ்சமும் தொடா்பில்லாத கப்பல்கள் மீது அவா்கள் தாக்குதல் நடத்துவது அதிகமாகி வருகிறது.
இதனால், உலகின் மிக முக்கியமான கடல்வணிக வழித்தடமான அந்தப் பகுதியில் சரக்குப் போக்குவரத்து மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து பல்வேறு நாடுகளுக்கும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதையடுத்து, செங்கடலில் ஹூதி கிளா்ச்சியாளா்களிடமிருந்து சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூா் போன்ற பல்வேறு நாடுகளும் தங்களது போா்க் கப்பல்களை அங்கு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்ததுவது தொடா்ந்தால் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் எச்சரித்தன.
அதனைப் பொருள்படுத்தாமல் செங்கடலில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையில் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வீசி ஹூதி கிளா்ச்சியாளா்கள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.