நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிவப்பு எறும்பு சட்னி.., புவிசார் குறியீடு வழங்கிய இந்திய அரசு
பழங்குடி மக்கள் தயாரிக்கும் சிவப்பு எறும்பு சட்னிக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
பொதுவாக வட்டார பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் தனித்துவமான பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் மதுரை மல்லி, ஆத்தூர் வெற்றிலை, வீரவநல்லூர் செடிபுட்டா சேலைகள் உள்பட பல பொருட்களுக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
சிவப்பு எறும்பு சட்னி
இந்நிலையில், இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஒடிசா மாநிலத்தில் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான ஒடிசா, மயூர்பஞ்ச் மலைப் பகுதியில் ‘கை’ என்ற ஒரு வகை சிவப்பு எறும்பு காணப்படுகிறது.இது ’Oecophylla smaragdina’ எனும் எறும்பு வகையாகும்.
இதனை அங்கு வாழும் பழங்குடி மக்கள் துவையல் செய்து உண்கின்றனர். மேலும், அருகில் உள்ள சந்தையிலும் விற்பனை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இதில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், ஸிங்க், தாமிரம், அமினோ ஆசிட்கள் ஆகியவை உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரிக்க கூடியது.
இந்நிலையில் இந்த சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என ஒடிசா அரசு கோரிக்கை வைத்த நிலையில் இந்திய அரசு அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.