நடுக்கடலில் ராஜபக்சக்கள் நடத்திய ஆடம்பர விருந்து! இரகசியமாக அழைக்கப்பட்ட அமைச்சர்கள்
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸ உட்பட பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு துறைமுகத்தில் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த விருந்து ஏற்பாடுகள் குறித்து வெளியான செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.
நடுக்கடலில் ராஜவிருந்து
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள படி உணவு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் தாம் செலவு செய்யவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
02 கப்பல்கள்
இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவுடன் சில அமைச்சர்கள் குழுவொன்று துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்ஸகாவா மற்றும் தியாகொவுல்லா ஆகிய 02 கப்பல்களை பயன்படுத்தி கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடலில் விருந்துபசார கொண்டாட்டமொன்றை நடத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கு நிமல் சிறிபால டி சில்வா துறைமுக அமைச்சர் எழுத்து மூல அனுமதி வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
விருந்துக்கு சிவப்பு கம்பளம்
நாடு வங்குரோத்தாகி கிடக்கும் இவ்வேளையில், துறைமுகத்தில் உள்ள உணவகத்தில் இருந்து உணவு குடிபான வகைகளை கூட பெற்றுக் கொண்டு, நாட்டிற்குச் சொந்தமான கப்பல்களைப் பயன்படுத்திக் கொண்டு எரிபொருளை விரயம் செய்வதும், நடுக்கடலில் விருந்து நடத்தி கொண்டாட்டம் நடத்த,கும்மாளமடிக்க முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம்
அமைச்சர்களின் தனிப்பட்ட செலவில் இந்த விருந்துபசாரங்களை நடத்துவது பிரச்சினையல்ல என்றாலும், அரச வளங்களைப் பயன்படுத்தி இவ்வாறான விருந்துபசாரங்கள் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அதேவேளை, இந்த விருந்துக்கு சிவப்பு கம்பளம் கூட விரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு மக்கள் பணத்தை செலவு செய்து விருந்து வைப்பது தொடர்பில் தான் ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.