கொத்தாக கொல்லப்பட்ட பலர்… வெறிச்சோடிய நகரம்: அவசர நிலை பிரகடனம் செய்த நாடு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குற்றவியல் குழுக்களின் சண்டை காரணமாக 16 பேர் கொல்லப்பட்ட நிலையில், முதன்மையான நகரமொன்று வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மயான அமைதியுடன்
சுமார் 3 மில்லியன் மக்கள் குடியிருக்கும் துறைமுக நகரமான Guayaquil வியாழனன்று மயான அமைதியுடன் காணப்பட்டுள்ளது. நெருப்பு வைத்தல், கார் வெடிகுண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் சிறையில் மூண்ட கலவரம் என நாட்டின் பல பகுதிகளில் மொத்தமாக 16 பேர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டுள்ளனர்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலான சாலைகள் வாகன நெரிசலில் பொதுவாக ஸ்தம்பிக்கும் சூழலில், வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
வன்முறைக்குப் பதிலளிக்கும் வகையில் நாடு முழுவதும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டிருந்தன.
அடிபணிய முடியாது
செவ்வாய்க்கிழமை TC தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் ஊடகவியலாளர் ஒருவரை நேரலையில் சிறை பிடித்தனர். இந்த சம்பவத்தை அடுத்தே சமீபத்தில் பொறுப்புக்கு வந்த ஜனாதிபதி Daniel Noboa, உள்நாட்டு ஆயுத மோதல் நிலையை பிரகடனம் செய்தார்.
நாங்கள் ஒரு போர் நிலையில் இருக்கிறோம், இந்த பயங்கரவாதிகளுக்கு அடிபணிய முடியாது என்று ஜனாதிபதி நோபோ புதன்கிழமை கூறினார். மட்டுமின்றி, ஈக்வடாரின் வீதிகள் மற்றும் சிறைச்சாலைகளின் கட்டுப்பாட்டை மீளப்பெற பாதுகாப்புப் படையினர் போராடி வரும் நிலையில்,
178 காவலர்கள் மற்றும் சிறை ஊழியர்கள் இன்னும் மெக்சிகன் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பு கொண்ட கும்பல்களால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, குவாயாகில் பகுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக துறைமுக நகரம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.