ஹமாஸ் கையில் வாளைக் கொடுக்காதீர்கள்: இஸ்ரேல்
ஐ.நாவின் பன்னாட்டு நீதிமன்றத்தில், இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கின் இரண்டாவது நாள் அமர்வில் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது இஸ்ரேல். இனப்படுகொலையில் குற்றவாளி ஹமாஸ்தான் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு பல ஆண்டுகள் எடுக்கும் எனக் கணிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை வழக்கு நடக்கும் இந்த வேளையில் நிறுத்த இடைக்காலத்தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் இடைக்காலக் கோரிக்கை மிக விரிவானது மற்றும் எந்தவகையிலும் உடனடி பலன் தராது என இஸ்ரேல் வாதிட்டுள்ளது.
மேலும் அந்தக் கோரிக்கை, ஹமாஸ் எந்தவிதக் கட்டுபாடுமின்றி தாக்குதல் நடத்த உரிமை கொடுப்பதாக அமையும் எனவும் இடைக்கால தடை என்பது பொதுமக்களுக்கு அரணாக இருப்பதற்கு பதிலாக ஹமாஸுக்கு வாளாக அமைந்துவிடும் எனவும் இஸ்ரேல் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் கோரிக்கை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை மறுப்பதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்டாலும் இஸ்ரேல் அதனை கடைபிடிக்குமா என்பது கேள்விகுறி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஈரான் ஆதரவு ஹெளதி அமைப்பு செங்கடலில் பன்னாட்டு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவருவதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவம் யேமன் ஹெளதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.