விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்க வேண்டும் : மைத்திரி சுட்டிக்காட்டு
மனித மற்றும் பௌதீக காரணிகளினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளை மேம்படுத்தாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற தேசிய அரிசியை ஊக்குவித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரிசியிலான உணவு
நாங்கள் தேசிய அரிசியிலான உணவையே சிறுவயது முதல் உண்கின்றோம். ஆனால் இப்போது இறக்குமதி செய்யப்படும் அரிசியை அதிகளவில் வாங்குகின்றனர்.
ஆனால் தேசிய அரிசியில் சுவை மாத்திரமன்றி சத்துக்களும் அதிகமாகும். இதனால் தேசிய அரிசியை ஊக்குவிப்பது அவசியமாகும்.
தேசிய விவசாயிகள் தொடர்பில் கூறும் போது காலநிலை மாற்றங்களால் பொலனறுவை, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பெருமளவிலான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளன.
விவசாயிகளுக்கு பொருளாதார நெருக்கடி
இந்த பகுதியிலுள்ள விவசாயிகள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். முறையான கணக்கெடுப்புகளை நடத்தி நிவாரணங்களை வழங்கி அவர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கோருகின்றேன்.
பல்வேறு காரணிகளினால் நாட்டின் தேசிய விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. நடைமுறைக்கு சாத்தியமான வகையில் விவசாய கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மேம்படுத்தாமல் பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என்றார்.