பிரதமர் 11 நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்; அனைவரும் வாழ்த்து சொல்லுங்கள் – அண்ணாமலை வேண்டுகோள்!
நமோ செயலி இணைப்பு மூலம் அனைவரும் பிரதமருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “வரும் ஜனவரி 22 அன்று, அயோத்தியில், பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.
இதனை அடுத்து, நமது பிரதமர் அவர்கள், நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது. பல தலைமுறைகளாக, பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, எண்ணற்றோரின் தியாகம் நிறைவேறும் திருநாள், வரும் ஜனவரி 22 ஆகும்.
அயோத்தியில் பகவான் ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை, பிரதிஷ்டை செய்யும் புண்ணிய வாய்ப்பு தமக்குக் கிடைத்திருப்பதாகவும், பாரதம் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் பக்தர்களின் பிரதிநிதியாக, அந்தப் புனிதமான பணியை மேற்கொள்வது, ஶ்ரீராமரின் வரம் என்றே கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த இறை பணியில், தாம், பாரதத்தின் 140 கோடி மக்களுக்கான ஒரு கருவி மட்டுமே என்றும் நமது பிரதமர் குறிப்பிட்டார்.
வேண்டுகோள்
மேலும், இந்தப் புனிதமான பணியை மேற்கொள்ளவிருப்பதால், வரும் 11 நாட்களும் நமது பிரதமர் விரதம் மேற்கொள்ளவிருப்பதாகவும், ஶ்ரீராமர் வசித்த நாசிக்கில் உள்ள புனிதத்தலமான பஞ்சவடியில் இருந்து விரதத்தைத் துவங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
பாரதத்தில் ஆன்மீக விழிப்புணர்வைத் தட்டி எழுப்பிய வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமான இன்று, இதனை அறிவிப்பது பொருத்தமானதாகும் என்றும் தெரிவித்தார். மேலும், நமது பிரதமர் அவர்கள், ஶ்ரீராமர் திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்யும் புனிதப் பணியில், தமக்கு நாட்டு மக்கள் அனைவரின் ஆசிகளும், வாழ்த்துக்களும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பல கோடி மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் பல ஆண்டுகள் போராடி நிறைவேற்றவிருக்கும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கீழ்க்காணும் பாரதப் பிரதமரின் நமோ செயலி இணைப்பு மூலம், அனைவரும் நமது பாரதப் பிரதமருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.