ரணிலுடன் இணைந்து செயற்படுவதே எனது நிலைப்பாடு : டக்ளஸ் உறுதி
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணித்தால் இன்னும் சில வருடங்களில் நாட்டுக்கு நியாயமான நிலை ஏற்படும் எனவும் ரணிலை விடுத்து வேறு யாரும் நாட்டின் தலைவராக வந்தால் நாடும் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கால்நடை வளர்பாளர்களின் நீண்ட கால பிரச்சினையான கால்நடை மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விதமாகவும் கால்நடை வளர்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் முகாமாக நானாட்டான் பள்ளக்கமம் பகுதியில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர்,
அரசியல் தீர்வும் நாட்டின் தேவையும்
“நான் இதுவரை என்னுடைய அரசியல் வாழ்கையில் 7 அதிபர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன், 30 வருடங்களாக நான் எது அரசியல் தீர்வாக அமைய வேண்டும் என நினைத்தேனோ, அதுவே தற்போது நாட்டின் தேவையாக உள்ளது.
அத்துடன், அது கேள்வி குறியாக இருந்தாலும் அதுவே நடைமுறை சாத்தியமாக உள்ளது.
ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்த சமயம் நாட்டின் நிலமை உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம் வன்முறை கலாச்சாரமும், இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியான வீழ்ச்சி, மறுபக்கம் வரிசைகளுமாக நாடு இருந்தது.
நாட்டிற்கான தலைமைத்துவம்
அந்த நிலமையை ரணில் மாற்றியுள்ளார்.
ரணில் குறுகிய காலத்தில் நாட்டில் நிலவி வந்த சில முக்கிய பிரச்சினைகளை தீர்த்தார், வரிசைகளை இல்லாமல் செய்தார், பொருட்களின் விலை அதிகரித்திருந்தாலும் தட்டுபாடுகள் இன்றி பொருட்கள் கிடைக்ககூடிய ஏற்பாட்டை செய்துள்ளார்.
எனவே நாம் அவருடன் சேர்ந்து பயணித்தால், இன்னும் ஒன்று இரண்டு வருடங்களுக்குள் ஒரு தரமான தீர்வை தருவார்.
அவரை விடுத்து வேறு யாரும் நாட்டின் தலைமைக்கு வந்தால் நாடு என்னும் மேசமான நிலைகே செல்லும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.
தெற்கில் உள்ள பல தலைவர்களுக்கு கொள்கையும் இல்லை திட்டங்களும் இல்லை ஆனால் ரணிலால் மட்டுமே இங்கு பல விடயங்கள் சாத்தியமாகும்.
எனவே அவருடன் இணைது செயற்படுவதே எனது நிலைப்பாடு.” என குறிப்பிட்டுள்ளார்.