கடும் பதிலடி உறுதி… மீண்டும் தாக்குதல் தொடுத்த அமெரிக்காவுக்கு ஹவுதிகள் எச்சரிக்கை
ஏமனில் ஒரே இரவில் அமெரிக்கா மற்றொரு தாக்குதலை நடத்தியதை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வலுவான மற்றும் கடுமையான பதிலடி உறுதி என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அமெரிக்கா சபதம்
ஈரான் ஆதரவு இயக்கத்தின் தாக்குதல்களில் இருந்து கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதாக அமெரிக்கா சபதம் செய்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் படைகள் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வருவதால் மத்திய கிழக்கில் பரவிய பதட்டத்தில் தற்போது இந்த தாக்குதல் சம்பவங்களும் இணைந்துள்ளன.
இதனிடையே, ஹவுதிகள் தாக்குதல் குறித்து ஈரானுக்கு தனிப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றும் அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உறுதியாகவும், வலுவுடனும்
பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூட்டாக சுமார் 30 பகுதிகளில் ஹவுதிகள் மீது தாக்குதல் முன்னெடுத்ததன் அடுத்த நாள் அமெரிக்கா இன்னொரு தாக்குதலை தொடுத்துள்ளது.
இந்த நிலையிலேயே ஹவுதிகள் செய்தித்தொடர்பாளர் Nasruldeen Amer தெரிவிக்கையில், அமெரிக்காவின் இரண்டாவது தாக்குதலுக்கான பதில் உறுதியாகவும், வலுவுடனும் இருக்கும் என்பதை தெரியப்படுத்துகிறோம் என்றார்.