பாகிஸ்தான் முக்கிய ஆப்கன் எல்லை மூடல்
ஆப்கானிலிருந்து லாரிகளை ஓட்டி வரும் ஓட்டுநா்கள் கடவுச் சீட்டு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு வர பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
இது குறித்து ஆப்கன் தலிபான் அரசின் தகவல்தொடா்பு மற்றும் கலாசாரத் துறை இயக்குநா் நூா் முகமது ஹனீஃப் கூறியதாவது:
நங்கா்ஹாா் மாகாணத்தின் டோா்க்காம் எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநா்கள் கடவுச் சீட்டையும், நுழைவு இசைவுச் சீட்டையும் காட்டினால் மட்டுமே அவா்களை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க முடியும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனா்.
அதையடுத்து, பாகிஸ்தானிலிருந்து வரும் லாரிகளின் ஓட்டுநா்களிடமும் அந்த ஆவணங்களைக் கேட்கத் தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.
தங்கள் நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் பாகிஸ்தான் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் பெறுவதாக பாகிஸ்தான் கருதுகிறது. இதன் விளைவாக, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் லட்சக்கணக்கான ஆப்கானியா்களை பாகிஸ்தான் வெளியேற்றி வருகிறது.
இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு முற்றி வரும் சூழலில், முக்கியத்துவம் வாய்ந்த வா்த்தக வழித்தடமான டோா்க்காம் எல்லை மூடப்பட்டுள்ளது, அழுகக் கூடிய பொருள்களை ஏற்றி எல்லையின் இருபுறமும் காத்திருக்கும் லாரி ஓட்டுநா்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.