சிகிச்சைக்காக வரிசையில் நிற்கும் காயம்பட்ட மக்கள்!
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு இடையே சிக்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் படும் கொடுமைகள் உலகம் அறியாதவை அல்ல. சர்வதேச நாடுகள் போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்திவரும் நிலையில், காஸா மக்களின் வலியை நிறுத்த எந்த வழியும் பிறக்கவில்லை.
இஸ்ரேலின் வான் மற்றும் தரைவழித் தாக்குதலுக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியாகின்றனர். காயம்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் இடமின்றி நிறைந்து வழிகின்றன.
சிகிச்சை கொடுக்க மிகக்குறைவான மருத்துவர்களைக் கொண்டுள்ள அவலம் காஸா மருத்துவமனைகளில் அரங்கேறியுள்ளது.
பிஆர்சிஎஸ் – ன் (PRCS) நடமாடும் மருத்துவ முகாம்களில் காயங்களோடு வரிசையில் காத்திருக்கின்றனர் காஸா மக்கள். கான் யூனிஸிற்கு அருகேயும், ரஃபா பகுதியிலும் உள்ள நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் இம்மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால், மருத்துவமனைகளுக்கு மின்விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இதனால் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் பெரும் அபாயத்தை அடைந்துள்ளனர்.
காஸாவில் 60,317 – க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 23,843 பேர் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 135 பேரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது.