நாட்டை விட்டு வெளியேறும் வல்லுநர்கள் : பாரதூரமான நிலை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது புதிய விடயம் அல்ல. ஆனால் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான நிலைமை ஏற்படலாம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாடு தற்போது பொருளாதார ரீதியாக சாதகமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நெருக்கடி தற்காலிகமானது, சரியான பாதையில் சென்றால் இதனை வென்றிட முடியும்.
பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு மாத்திரம் ஏற்படவில்லை. உலகின் மற்றைய நாடுகளைப் போலவே நாமும் சரிந்தோம். ஆனால் உலகின் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நாம் விரைவாக மீட்சிபெற்றோம்.
தற்காலிக நிலைமை
எங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடவில்லை. இதற்கு சிறிது காலம் எடுத்தாலும், தற்போது பொருளாதாரம் சாதகமாக இருப்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கியுள்ளோம்.
ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டுவது நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வழியாக அமையாது. இது ஒரு தற்காலிக நிலைமை. எதிர்காலத்தில், இழந்த நம்பிக்கைகள் அல்லது நன்மைகளை மீண்டும் பெறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.