இஸ்ரேலிடம் நாங்கள் வலியுறுத்துவது… : அமெரிக்கா
அமெரிக்கா, காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளின் வீரியத்தைக் குறைத்து கொள்வதற்கான நேரம் இது எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் போர் 100 நாள்களாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா இஸ்ரேலுடனான கருத்து முரணை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்கு முன்னதாக ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இஸ்ரேல் எல்லை பகுதி நகரத்தில் வசித்த மூதாட்டி ஒருவரும் அவரது மகனும் பலியாகினர்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசும்போது, அமெரிக்கா இஸ்ரேலிடம் அதன் போர் வீரியத்தைக் குறைத்து கொள்வது குறித்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்திற்கான சரியான நேரம் இது என அவர் குறிப்பிட்டார்.
எல்லைகளைக் கடந்து விரிவடையும் போரில் இப்போது பல நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்காற்றி வருகின்றன.
பன்னாட்டளவில் போர் நிறுத்தத்துக்கும் கைதிகளை விடுவிக்கவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. போரின் 100-வது நாளை முன்னிட்டு அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி பல நாடுகளில் இரு தரப்புக்குமான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜான் கிர்பி, “உங்களை (இஸ்ரேல்) முழுமையாக போரிலிருந்து வெளியேறவோ ஹமாஸைப் பின்தொடர வேண்டாம் எனவோ நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால் போரின் வீரியத்தைக் குறைப்பதற்கான நேரத்திற்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.