பிரித்தானியாவில் 1997 தேர்தல் போன்று காத்திருக்கும் பேரதிர்ச்சி: கருத்துக்கணிப்புகளில் மக்கள் சூசகம்
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி நினைத்துப்பார்க்காத அளவுக்கு பெரும் தோல்வியை சந்திக்க இருப்பதாக தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மிக மோசமான தோல்வி
பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 1997 தேர்தல் போன்று மிக மோசமான தோல்வியை எதிர்கொண்டு தொழில் கட்சியிடம் ஆட்சியை இழக்க இருப்பதாகவே கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மத்தியில் தேர்தலை முன்னெடுக்கும் திட்டத்துடன் பிரதமர் ரிஷி சுனக் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், மொத்தமுள்ள 650 ஆசனங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 169 எண்ணிக்கை மட்டுமே கைப்பற்றும் என்றும்,
தொழில் கட்சி 385 ஆசனங்களை வென்று ஆட்சியை கைப்பறும் என்றும் முக்கியமான கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1997ல் கன்சர்வேடிவ் கட்சி இழந்த ஆசனங்களை விடவும் 2024 தேர்தலில் அதிக எண்ணிக்கையில் இழப்பை எதிர்கொள்ள இருக்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.
மேலும், 1906க்கு பின்னர் ஆளும் கட்சி ஒன்று மிக மோசமாக மக்கள் ஆதரவை இழப்பதும் இந்த முறை தான் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் 14,000 பிரித்தானிய மக்கள் YouGov முன்னெடுத்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்
மட்டுமின்றி, கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்கள் சிலரே தொடர்புடைய கருத்துக்கணிப்புக்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, சமீபத்திய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கன்சர்வேடிவ் கட்சி பின்னடைவை சந்திப்பதையே தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி 19 சதவிகித புள்ளிகள் பின்தங்கியுள்ளதாகவே தெரியவந்தது.
ஆனால், முந்தைய தேர்தலின் போதும் நூற்றுக்கணக்கான கருத்துக்கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டும், அவை அனைத்தும் பொய்யானதாக பிரதமர் ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார்.