மணிப்பூரில் 7-8 அமைப்புகள் ராகுல் காந்தியை சந்தித்தனர்: ஜெய்ராம் ரமேஷ்
மணிப்பூர் எல்லையில் உள்ள கோஹிமா மாவட்டத்தில் உள்ள குசாமா கிராமத்திற்கு ராகுல் காந்தி தனது கட்சி உறுப்பினர்களுடன் வருகை தந்தார். இந்த நடைப்பயணம் மணிப்பூர் மாநிலம் தௌபாலில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தனது பயணத்தின் போது, நாகா ஹோஹோ உள்ளிட்ட நாகா பழங்குடி அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தேவாலய அமைப்புகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மாநில காங்கிரஸ் செயல் தலைவர் க்ரிடி தியுனுவோ தெரிவித்தார்.
ஜனவரி 18ஆம் தேதியன்று அசாமில் நுழைவதற்கு முன்பு ராகுல் காந்தி மாநிலத்தின் குறைந்தது ஐந்து மாவட்டங்கள் வழியாக பயணிப்பார். செவ்வாய்க்கிழமை விஸ்வேமா கிராமத்திலிருந்து நாகாலாந்துக்கு நடைப்பயணத்தை தொடங்கும் அவர், தலைநகரை அடைந்ததும், இரண்டாம் உலகப் போர் கல்லறையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 15 மாநிலங்களில் உள்ள 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக செல்லும். பேருந்து பயணம் மற்றும் நடைப்பயணமாக 66 நாள்கள் 6,713 கி.மீ. தொலைவைக் கடந்து மாா்ச் 20-ஆம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.
இந்த நடைப்பயணம் குறித்து, அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மணிப்பூரில் இருந்து நாகாலாந்திற்குள் நுழைகிறோம். இன்று இரவு முதல், நாகாலாந்தில் இந்த ஒற்றுமை நடைப்பயணம் நடக்கும். மணிப்பூர் மக்களின் பதில் ஆச்சரியமாக இருந்தது. சுமார் 7-8 அமைப்புகள் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். தங்கள் வலிகள் மற்றும் துன்பங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் ராகுல் காந்தியுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்” எனக் கூறியுள்ளார்.