சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள அடையாள வேலை நிறுத்தம்
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு ஏனைய சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுகாதாரதுறைசார் 72 தொழிற்சங்கள் இன்று காலை 6.30 மணி முதல் 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களுக்கு கொடுப்பனவு வழங்க எடுத்த தீர்மானம் மகிழ்ச்சி அளித்த போதிலும் ஏனையவர்களுக்கும் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன.
தொடர் வேலை நிறுத்த போராட்டம்
தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சங்க போராட்டத்தினால் நோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை வரையறுக்கும் நோக்கில் சில அத்தியாவசிய சேவைகளை மட்டும் மேற்கொள்ள உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தேவையற்ற வகையில் தலையீடு செய்து பாதுகாப்புப் படையினரை கடமையில் அமர்த்தினால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்காக வருந்துவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.