;
Athirady Tamil News

ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்த யாழ். மக்கள்! முன்வைத்த கோரிக்கை

0

யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், வீதி புனரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைக்குமாறு கோரியே அப்பகுதி மக்கள் இவ்வாறானதொரு முன்னுதாரனமான கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் அனுப்பிவைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்ப்பட்டுள்ளதாவது,

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவின் ஜே.320 மற்றும் ஜே.321 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு நடுவே அமைந்துள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை மேற்குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் பயன்படுத்தும் மிகவும் தேவையான ஒரு பிரதான வீதியாகும்.

இது தவிர குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மற்றும் அயல் கிராமங்களில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீரசிங்கம் மத்திய கல்லூரி, வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிற்கு செல்வதற்காக பயன்படுத்தும் வீதியாக இது காணப்படுகின்றது.

பயணிக்கவே முடியாத நிலையில் பாரிய குழிகளுடன் இவ்வீதி காணப்படுகிறது. இவ்வாறான பாரிய குழிகளால் மழை காலங்களில் அதிக விபத்துக்களும் நடைபெறுகின்றன.

கடந்த 18 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படும் இவ்வீதியினை புனரமைத்து தருமாறு சகல தரப்பினர்களிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் இது வரை எந்தவிதமான சிறு புனரமைப்புக் கூட செய்யப்படாமல் பயன்படுத்தவே முடியாத வீதியாக எமது வீதி மாற்றமடைந்து வருகின்றது.

நாளுக்கு நாள் மிக மோசமான வீதியாக மாறி வரும் இவ்விதியை உடனடியாக புனரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இவ்வீதி புனரமைப்பிற்காக எமது பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து அவர்களின் ஒரு நாள் வேதனமான (ஆயிரம் ரூபாவை) சேகரித்து வங்கியூடாக சுமார் 96 ஆயிரம் ரூபாவினை காசோலையாக அனுப்பி வைத்துள்ளோம்.

அப்பணத்தினையும் புனரமைப்பு பணிகளுக்கான செலவு நிதியில் சேர்த்துக் கொள்வதோடு, வீதியின் புனரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றுள்ளது.

மேலும், இவ் வீதி புனரமைப்புத் தொடர்பான கோரிக்கை கடிதங்களை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், சாவகச்சேரி பிரதேச செயலர், கொடிகாமம் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்க அப்பகுதி மக்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.