இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு: உட்கட்சி ஜனநாயகம் வெளிப்படும் என்கிறார் சுமந்திரன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவானது உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – மாங்குளம் நீதிமன்றத்திற்கு இன்றையதினம் (17.01.2024) வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் தெரிவு
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி காலை பத்து மணிக்கு திருகோணமலையிலே இடம்பெற இருக்கின்றது. இதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக நானும் அறிகின்றேன்.
நானும் தலைவர் பதவி போட்டியிலே இருக்கும் காரணத்தினால் இந்த ஆயத்தங்கள் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக வினவிக்கொண்டு இருக்கிறேன்.
உட்கட்சி ஜனநாயகம்
பொதுச்சபையிலே அங்கம் வகிப்பவர்களுக்கான கடிதங்கள் அனுப்பட்டதாக தற்போது பொதுச்சபையிலே இருக்கின்ற பொதுச்செயலாளர் மூலம் அறிந்திருக்கின்றேன்.
ஆகவே திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி இந்த தேர்தல் உச்ச கட்டமாக உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முகமாக திருகோணமலையில் நடைபெற்று நல்லதொரு முடிவு வருமென நாம் எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.