ராமர் கோயில் திறக்கும் நாளில் பிரசவமாக வேண்டும்.., உயிரையே பணயம் வைக்கும் கர்ப்பிணிகள்
ராமர் கோயில் திறப்பு நாளில் குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமர் கோயில் திறப்பு விழா
பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் ஜனவரி 22 -ம் திகதி நடைபெற உள்ளது. அப்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிறுவ உள்ளார்.
மேலும், ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்கள் அழைக்கப்பட உள்ளனர். இவர்களை தவிர கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் சொல்லப்படுகிறது.
கர்ப்பிணிகள் கோரிக்கை
இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு நாளில் குழந்தையை பெற்று கொள்ள விரும்புவதாக கூறி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்களிடம் கர்ப்பிணி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கணேஷ் சங்கர் வித்யார்த்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு துறை பொறியாளராக உள்ள சீமா திவேதி கூறுகையில், “ஒரே பிரசவ அறையில் 12 முதல் 14 பேர் சிசேரியன் பிரசவம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், ஜனவரி 22 -ம் திகதி 35 சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றார்.
அதாவது ஜனவரி 22 -ம் திகதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்போ அல்லது பின்போ பிரசவ திகதி இருந்தால் 22 -ம் திகதி அன்று சிசேரியன் செய்ய வேண்டும் என கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கர்ப்பிணி பெண் ஒருவர் கூறுகையில், “ராமர் கோயிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை நடைபெறும் நாளில் என் குழந்தை பிறக்க வேண்டும். அப்படி பிறந்தால் என் குழந்தை வளர்ந்து வெற்றியும் பெருமையும் பெறும் என நம்புகிறோம்” என்றார்.