இலஞ்சம் கோரி கைதான அரச உத்தியோகத்தர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் சந்தேக நபரான உத்தியோகத்தர் தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு நபர் ஒருவரிடம் ரூபா 10 ஆயிரம் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் போது கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை(18) அன்று உணவகம் ஒன்றில் வைத்து மாறுவேடத்தில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருதமுனை 5 பிரிவு காரியப்பர் வீதியை சேர்ந்த இப்ராஹிம் லெப்பை அப்துல் நஷார்( வயது-54)என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றிற்காக அரச சேவையில் இடைநிறுத்தப்பட்டு பின்னர் அரச சேவையில் இணைக்கப்பட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.