;
Athirady Tamil News

யாழ். புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

0

யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் நாளை (22-01-2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் கடந்த 09 ஆம் திகதி அழைக்கப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்தது.

தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என குறித்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.